Print this page

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்கும் தீர்மானம் – பிரதமர் விளக்கம்

December 23, 2025

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிப்பது மாற்றத்திற்குரிய கல்வி செயல்முறைக்கு அமைவாக தேசிய கல்வி நிறுவனம், கல்வி ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து எடுத்த கூட்டு தீர்மானம் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு முறைகளில், ஆசிரியர்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகளையும் மாணவர்கள் கல்வி மற்றும் செயன்முறை செயல்பாடுகளையும் சரியான முறையில் மேற்கொள்ள வசதியாக, ஒரு பாட நேரத்தை 50 நிமிடங்களாக நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் விளக்கினார்.

இதனிடையே, கல்வித் துறையில் தற்போது உருவாகியுள்ள சில பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர்–அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்பு (22) ஆம் திகதி ‘இசுருபாய’ வளாகத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டு அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைவாக பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிப்பதன் மூலம் உருவாகும் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க உறுப்பினர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து மீண்டும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.